தமிழகத்தில் நாளொன்றுக்கு ரூ.1 கோடி வரை வசூலிக்கும் கடன் செயலி மோசடி கும்பல் கைது..!
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் வசூலிக்கும் வகையில் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வந்த ஆன்லைன் கடன் செயலி மோசடி கும்பலை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பாக ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தன.
இந்த மோசடி கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு சார்பில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த மோசடி கும்பல் உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களிலிருந்து செயல்படுவது தெரிய வந்ததை அடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட 4பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள் மற்றும் 19 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், இந்த லோன் செயலி மோசடி கும்பல் 50க்கும் மேற்பட்ட லோன் செயலிகள் மூலம் கடன் வசூலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் கடன் செயலி மோசடி நெட்வொர்க்கின் குற்றவாளிகளை வெளி மாநிலத்திற்கு சென்று கைது செய்த சைபர் கிரைம் பிரிவு தனிப்படையினரை காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் அங்கீகரிக்கப்படாத லோன் செயலிகள் மூலம் கடன் எதுவும் வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
Comments