தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு..!
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லை பிடாரி அம்மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூக்கனேரியில் கரைக்கப்பட்டன.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 21 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் படகு இல்ல ஏரியில் படகுகள் மூலம் கொண்டு சென்று கரைக்கப்பட்டன.
கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே விநாயகரின் வாகனமான எலியை பிரமாண்ட வடிவத்தில் அமைத்து அதன் மீது விநாயகர் சிலை வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று சின்னாற்றில் சிலையை கரைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று குளத்தில் கரைக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 41 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன.
Comments