ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

0 2852

இந்திய கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட பிரமாண்ட, விமானம் தாங்கி போர் கப்பல்' ஐ.என்.எஸ்., விக்ராந்த்' ஐ பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தியாவின் 7,516 கிலோமீட்டர் நீண்ட கடலோர பகுதியை பாதுகாக்க விமானம் தாங்கி போர் கப்பலின் சேவை மிகவும் அவசியமானதாக உள்ளது. முதல்முறையாக, 1957ஆம் ஆண்டு, இங்கிலாந்து கடற்படையால் 2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட எச்.எம்.எஸ். ஹெர்குலஸ் என்ற விமானம் தாங்கி கப்பல் இந்திய கடற்படைக்காக வாங்கப்பட்டது.

ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயர் சூட்டப்பட்ட இந்த கப்பல் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் மகத்தான சேவையாற்றியது. மிகவும் பழமையானதால் 1997-ம் ஆண்டு இந்திய கடற்படையிலிருந்து விடைகொடுக்கப்பட்டு, மும்பையில் அருங்காட்சியக கப்பலாக நிறுத்தப்பட்டது. 

அந்த கப்பலுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அதே பெயரில் மற்றொரு கப்பலை வெளிநாட்டிலிருந்து வாங்காமல் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கட்ட முடிவெடுக்கப்பட்டு, 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட விக்ராந்த் கப்பல் இந்திய கடற்படையின் போர் கப்பல் வடிவமைப்பு பிரிவால் கட்டப்பட்டது.

76 சதவீதம் உள்நாட்டு உபகரணங்கள், எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, 20,000 கோடி ரூபாய் செலவில் 2013ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த கப்பல் பலதரப்பட்ட கடற்பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது.

14 அடுக்குமாடிகளை கொண்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த்தில், பெண் அதிகாரிகள், மாலுமிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறைகள், அறுவை சிகிச்சை அறைகள் உள்பட மொத்தம் 2,200 அறைகள் உள்ளன. 43 ஆயிரம் டன் எடையை தாங்கக் கூடிய இந்த போர்கப்பலிலிருந்து 31 போர் விமானங்களை இயக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 28 நாட்டிக்கல் மைல் வேகத்தில் பயணிக்ககூடிய விக்ராந்த் போர் கப்பல், 7,500 நாட்டிக்கல் மைல் தூரம் தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது.

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு, இந்திய கடற்படையின் பெருமையான அடையாளமாக கருதப்படும் ஐ.என்.எஸ் விக்ராந்தை கொச்சி கடற்படை தளத்தில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதன்மூலம் விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுள் ஒன்றாக இந்தியாவும் இணைந்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வளர்ந்த நாடுகள் மட்டுமே விமானந்தாங்கி போர்க்கப்பலை கட்டிவந்தநிலையில், அந்த பட்டியலில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமைமிகு தருணம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்தோ - பசிபிக் கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பு நீண்டகாலமாக கண்டுகொள்ளப்படாமல் இருந்ததாகவும், ஐ.என்.எஸ். விக்ராந்த் வருகையால் அது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கி, தேசியக்கொடி, அசோக சின்னம், நங்கூரம் ஆகியவை இடம்பெற்ற கடற்படையின் கொடியை அறிமுகம் செய்தபின் பேசிய பிரதமர், கடற்படையில் மிச்சமிருந்த காலனி ஆட்சியின் குறியீட்டை அகற்றியுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments