அரசு பள்ளியில் ஆசிரியைகளை கழிவறையில் வைத்து பூட்டிய 3 புள்ளிங்கோ மாணவர்கள் கைது..!
சென்னை திருவொற்றியூர் அரசு மேல் நிலை பள்ளியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளை கழிவறைக்குள் வைத்து பூட்டிசெல்வதை வாடிக்கையாக்கிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கி தாய் தந்தையிடம் ஒப்படைக்க இளஞ்சிறார் நீதிகுழுமம் உத்தரவிட்டது.
சென்னை திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளில் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருந்து வந்து 12 ஆம் வகுப்பு படித்து வரும் 3 மாணவர்கள், பள்ளி வகுப்பறையில் பெண் ஆசிரியையிடம் ஒழிங்கினமாக நடந்து கொண்டதாகவும் இதனை கண்டித்ததால் ஆசிரியைகள் கழிவறைக்கு செல்வதை நோட்டமிட்டு கழிவறைக்குள் வைத்து வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். மாணவிகளையும் கழிவறைக்குள் வைத்து பூட்டிச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்துள்ளது.
இது குறித்து தட்டி கேட்கும் சகமாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டுவது என ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
பெற்றோர் கண்டித்தும் கேட்காமல் கெத்து என்ற பெயரில் அந்த மாணவர்கள் செய்த சேட்டைகளுக்கு வேட்டு வைக்கும் விதமாக பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மூன்று மாணவர்களையும் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போலீசார், அவர்களை இராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் லலிதா முன்பு ஆஜர்படுத்தினர்.
மூன்று மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, திருவள்ளூர் மாவட்டம் இளைஞர் சிறார் நீதி குழுமம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். மூன்று மாணவர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கி முறையான கவுன்சிலிங் கொடுத்து தாய் தந்தையரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிகுழுமம் உத்தரவிட்டது.
Comments