ஐ.என்.எஸ். விக்ராந்த் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

0 2415
ஐ.என்.எஸ். விக்ராந்த் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை கொச்சியில் இன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட அந்த கப்பலை கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றிகரமாக சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்மூலம் விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

வீரர்கள், பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 700 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே ரக போர் விமானங்கள், கமோவ் கே.ஏ.- 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்ஹெச் - 60ஆர் ஹெலிகாப்டார்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும்.

262 மீட்டர் நீளம் மற்றும் 59 மீட்டர் உயரம் கொண்ட இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் டன் எடை கொண்டதாகும். மேலும் 7,500 நாட்டிக்கல் மைல் தூரம் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது. 15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன. மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த போர்க்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும்

இந்நிலையில், கொச்சியில் இன்று நடைபெறும் விழாவில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் அவர் வெளியிடுகிறார். ஏற்கனவே இருந்த கடற்படையின் கொடியில் செயின்ட் ஜார்ஜ் சிலுவையுடன் மேற்புறத்தில் தேசியக்கொடியும் இடம் பெற்று இருக்கிறது. இந்நிலையில், இந்த செஞ்சிலுவை இல்லாமல் கடற்படைக்கான புதிய கொடி வெளியிடப்படுகிறது. இனிமேல், இந்திய கடற்படையின் அனைத்து கப்பல்களிலும், தளங்களிலும் இந்த கொடியே பயன்படுத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments