தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.! ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 93 சதவிதம் அதிகமாக மழை பொழிவு
நீலகிரி, கோயம்புத்தூர் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 93 சதவிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சேலம், கரூர், நாமக்கல், திருச்சி உட்பட 17 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 93 சதவிதம் அதிக மழைப்பொழிவு பதிவாகி இருப்பதாகவும், இது 122 ஆண்டுகளில் 3-வது அதிகபட்ச மழைப்பதிவு என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Comments