வேற மாறி வேற மாறி டீசலுக்கு எக்ஸ்ட்ரா டேங்க்... புதுச்சேரி செல்லும் லாரிகள்..!

0 3563

தமிழகத்தை விட புதுச்சேரியில் டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைவாக இருப்பதால், சரக்கு லாரிகள் 'எக்ஸ்ட்ரா டேங்க்' பொருத்தி டீசல் நிரம்பிக் கொண்டு வெளி மாநிலங்களுக்குச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக உள்ள நிலையில், புதுச்சேரியில் 86 ரூபாய் 45 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லிட்டருக்கு 8 ரூபாய் வரை விலையில் வித்தியாசம் இருப்பதால் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் பெரும்பாலான லாரிகள் தங்கள் லாரிகளுக்கு புதுச்சேரிக்கு சென்று டீசல் போட்டு செல்வதாகக் கூறப்படுகின்றது.

வழக்கமாக லாரிகளில் 450 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கும். புதுச்சேரியில் குறைந்த விலையில் டீசல் நிரப்பி ஸ்டாக் வைத்துக் கொள்வதற்காக, லாரியின் மேல் பக்கத்தில் கூடுதலாக 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்கை பொருத்தி அதிலும் டீசலை நிரப்பிச் செல்கின்றனர்.

புதுச்சேரியில் 1,250 லிட்டர் டீசல் நிரப்பிச் சென்றால் 1 லட்சத்து 8 ஆயிரத்து 62 ரூபாய் 50 பைசா ஆகும் என்றும், அதே அளவுள்ள டீசலை தமிழகத்தின் பங்க்-களில் நிரப்பினால் 1 லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும் என்றும் தெரிவித்த லாரி உரிமையாளர்கள், அதனால்தான் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் பெரும்பாலான லாரிகளும், வட மாநிலங்களுக்குச் சென்று விட்டு சென்னை வழியாக ஊருக்கு திரும்பும் லாரிகளும், புதுச்சேரியில் டீசல் போட்டுச்செல்வதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments