ரெயிலில் ருசியான பிஸ்கட் மயங்கிய நபர்களிடம் 30 செல்போன்கள் அபேஸ்..! நல்லா இருக்குடா உங்க டெக்னிக்

0 3515

திருப்பூரில் வீடு எடுத்து தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடித்து வந்த வட மாநிலக் கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

திருப்பூருக்கு வேலைதேடி இரயில் நிலையத்தில் வந்திறங்கும், வடமாநில இரயில் பயணிகளை குறிவைத்து, மர்ம நபர்கள் நட்பு ரீதியாக பேச்சுக் கொடுத்து மயக்க மருந்து தடவிய கிரீம் பிஸ்கட்டுகள் , டீ , குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மயங்கியவுடன் செல்போன்,பணம், உடைமைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவங்கள் கடந்த வாரத்தில் திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக நடந்துள்ளன.

இதுகுறித்து திருப்பூர் இருப்புப் பாதை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், காவல் ஆய்வாளர் பிரியாசாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பேக்கரிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் இருந்த செல்போன் எண்களின் சிக்னல்களை சைபர்செல் போலீசின் உதவியுடன் சேகரித்த போலீசார் சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று திருப்பூர் இரயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே, மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் சம்பவத்தில் ஈடுபட்டதாக, பீகார் மாநிலம் ஆரரியா மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் மன்வார் ஆலம், முகமத் ஆசாத், அப்துல்லா, மக்முத் ஆலம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூர் குன்னங்கல் பாளையம் அருகில் உள்ள சூரியா காலனியில் வாடகை வீட்டில் தங்கி இருப்பதும், அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டு,பிஸ்கட்டில் மயக்க மருந்து தடவி கொடுத்து ரயில் நிலையம் மற்றும் காதர் பேட்டை பகுதிக்கு வரும் வட மாநிலத்தவரை குறி வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இவர்கள் பீகாரில் இருந்து இங்கு வரும்போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி வாங்கி வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திருடிய பணத்தை கொண்டு தங்களுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து 30 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மாத்திரைகளை பொடியாக்கிய பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரெயில் நிலையம் மட்டும் அல்ல, பேருந்து நிலையம் உள்ளிட்ட எந்த இடத்திலும் அறிமுகம் இல்லாதவர் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி உண்பதை தவிர்ப்பது உடலுக்கு மட்டும் அல்ல உடன் எடுத்துச்செல்லும் மதிப்பு மிக்க பொருட்களுக்கும் நல்லது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments