ஸ்ரீமதி மரணம் குறித்து ஊடகங்களில் விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

0 4020
ஸ்ரீமதி மரணம் குறித்து ஊடகங்களில் விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து ஊடக விசாரணை நடத்தக்கூடாது என்ற உத்தரவை மீறி சில சமூக ஊடகங்கள் விசாரணை நடத்துவதாக அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், அவ்வாறு விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவின் முழுமையான விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதில், மாணவி மரணம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும், சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜிப்மர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞராக இருந்து கொண்டு இதுபோல தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல என சுட்டிக்காட்டிய நீதிபதி, மாணவி விவகாரம் குறித்து ஊடகங்களில் விசாரணை நடத்தும் வழக்கறிஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதி தனது உத்தரவில் எச்சரித்துள்ளார்.

புகார்தாரரே குற்றம் சாட்டப்பட்டவராக மாறுகின்ற சம்பவங்களை இந்த நீதிமன்றம் தனது அனுபவத்தில் பார்த்துள்ளது எனவும், விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் அது போன்ற கட்டத்தை இன்னும் விசாரணை குழு எட்டவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த இடைக்கால விசாரணை அறிக்கையில், பல்வேறு சூழல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, தற்போதைய நிலையில் அவற்றை வெளியிட முடியாது என்றார்.

மாணவியின் மரண விவகாரத்தில் நடந்த சம்பவங்களை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments