ஸ்ரீமதியின் பெயரால்... அந்த 46 நாட்கள் நடந்த சம்பவங்கள்..!
மாணவி ஸ்ரீமதியின் பிணக்கூறாய்வு குறித்த ஜிப்மர் மருத்துவமனையில் அறிக்கையில் மாணவியின் மரணம் கொலையோ, பலாத்காரமோ அல்ல தற்கொலை என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் ஜூலை மாதம் 12 ந்தேதி நள்ளிரவு முதல் கடந்த 46 நாட்களாக ஸ்ரீமதியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 12 ந்தேதி இரவு 10:50 மணிக்கு மேல் மாடியில் இருந்து குதித்து மரக்கிளையை முறித்துக் கொண்டு கீழே விழுந்து பலியானதாக தகவல் வெளியானது. உடனடியாக கவனிக்க தவறிய பள்ளியின் காவலாளி மண்ணாங்கட்டி அதிகாலை 5:20க்கு மாணவி உயிரிழந்து கிடப்பதை பார்த்து தாளாளர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து 5:24 மணிக்கு பள்ளி செயலாளர் சாந்தி உள்ளிட்ட 4 பேர் ஸ்ரீமதியின் சடலத்தை தூக்கிச்சென்றனர்.
காரில் ஏற்றி கள்ளக்குறிச்சி கொண்டு செல்லப்பட்ட மாணவியின் சடலம் மருத்துவர்களின் சோதனைக்கு பிறகு முறைப்படி பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே காலை 6 மணிக்கு தகவல் அறிந்து வந்த மாணவியின் தாய் தனது மகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பள்ளியின் முன்பு அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அடுக்கடுக்கான கேள்வி களை எழுப்பினார்
மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்தை மாணவியின் தாய் மற்றும் உறவினர்களிடம் போலீசார் காண்பித்தனர். அப்போதே பள்ளியை இழுத்து பூட்ட வேண்டும் என்று ஸ்ரீமதியின் தாய் மாமன் உரக்க குரல் எழுப்பினார்.
அவர்களது சந்தேகத்தை தீர்க்கும் வகையில் அன்று காலை 10: 30 மணிக்கு சின்னசேலம் காவல் நிலையத்தில் வைத்து மாணவி மரக்கிளைகளுக்குள் கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள், தாய் செல்வி அவரது சகோதரர் செல்வக்குமாரிடம் காண்பிக்கப்பட்டன. இதில் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை என்று செல்வி நம்ப மறுத்தார்.
அன்று முழுவதும் பல முறை சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் மறு நாள் 14 ந்தேதியும் ஸ்ரீமதியின் தாய் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் போராட்டம் நடத்தியவர்களின் முன்னிலையில் மாணவி எழுதிய கடிதத்தை போராட்டம் நடத்தியவர்களிடம் வரி வரியாக வாசித்து காண்பித்தார்
முடிவில் அந்த கடிதத்தில் இருப்பது தனது மகளின் கையெழுத்தே அல்ல என்று ஸ்ரீமதியின் தாய் செல்வி மறுத்தார். அன்றே செல்வி தனது மகளது உயிரிழப்பில் உள்ள சந்தேகங்களை வீடியோ போல பதிவு செய்து அதனை ஷேர் செய்து ஆதரவு தரும்படி வேண்டினார்.
அடுத்தடுத்த நாட்களிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில் 16 ந்தேதி கள்ளக்குறிச்சியில் நகரை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பல்வேறு கட்சியினர் ஆதரவுடன்ஸ்ரீமதியின் தாய் போராட்டம் நடத்தினார்.
இதற்க்கிடையே பல்வேறு முக நூல் , டுவிட்டர் கணக்குகள் மூலமும், யூடியூப் சேனல்கள் மூலமும் குறிப்பாக 3 வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவும் 17 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்துக்கு திரட்டப்பட்டனர். அன்று பள்ளி முன்பு நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பள்ளியை அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கினர்
கலவரத்துக்கு காரணம் ஸ்ரீமதியின் தாய் செல்வி என்று பள்ளி செயலாளர் சாந்தி குற்றச்சாட்டு தெரிவித்தார். அன்று நிகழ்ந்த பெரும் கலவரத்திற்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஸ்ரீமதியின் தாய் மறுப்புதெரிவித்தார்
அதன் தொடர்ச்சியாக பள்ளி நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பள்ளியில் நிகழ்த்தப்பட்ட கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது . கலவர வழக்கில் இதுவரை 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
கடந்த 27ந்தேதி முதல் அமைச்சரை சந்தித்து நீதிகேட்டு விண்ணப்பம் அளித்தார் செல்வி , அன்று இரவு 27ந்தேதி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி இளந்திரையன், 29 ந்தேதி தனது நிபந்தனை தொடர்பான உத்தரவில் ஆசிரியைகளுக்கு இந்த உயிரிழப்பில் தொடர்பில்லை என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஜிப்மர் அறிக்கையை சுட்டிகாட்டி மாணவியின் மரணம் கொலையோ, பலாத்காரமோ அல்ல என்றும் தற்கொலை என்றும், மேலிருந்து குதித்த போது மரக்கிளையால் உடல் பகுதிகளில் காயம் என்றும் ஸ்ரீமதியின் தரப்பு எழுப்பியது போன்ற எந்த சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 46 நாட்களாக நீடித்து வந்த மர்மத்தை நீதிபதி தனது தீர்ப்பின் மூலம் முடித்து வைத்திருந்தாலும் ஸ்ரீமதியின் தாய் , இது தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்கவில்லை. சிபிசிஐடி போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க தங்கள் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
Comments