கலவரத்தில் மாடு களவாடிய பூவரசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
கள்ளக்குறிச்சி கலவரத்தை பயன்படுத்தி, போலீஸ் வாகனங்களுக்கு தீவைத்த 3 பேர் மற்றும் மாடு களவாடியதாக கைது செய்யப்பட்ட பூவரசன் ஆகியோர் மீது வீடியோ ஆதாரத்துடன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளிக்கு எதிரான கலவரத்தில் இதுவரை மொத்தம் 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
கலவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கூடத்திற்கு பின்பக்கம் வசிக்கின்ற விவசாயிகளை மிரட்டி மாடுகளை களவாடிச்சென்ற புகாரில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சின்னசேலத்தை சேர்ந்த பூவரசன் என்கின்ற மாயி போலீசாரால் கைது செய்யப்பட்டார்
அதே போல காவல் துறையினரின் டாடா சுமோ வாகனத்துக்கு தீவைத்த பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தை சேர்ந்த 22 வயதான சஞ்சீவ் கைது செய்யப்பட்டிருந்தார். காவல்துறை பேருந்துக்கு தீவைத்த புகாரில் விளாந்தங்கல் ரோடு பகுதியை சேர்ந்த 19 வயது வசந்தன், புது பக்கசேரி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன் ஆகிய 3 பேரும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து 4 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போல மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை பயன் படுத்தி பல்வேறு வதந்திகளை பரப்பி கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக 53 யூடியூப் சேனல்களும், 7 ட்விட்டர் பக்கங்களும், 21 முகநூல் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. 3 வாட்ஸ் குழுக்களின் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
Comments