சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் பெண் மருத்துவர் கைது
சென்னையில், ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் பெண் மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 20-ந் தேதி, தியாகராய நகரில் சரவணன் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை, வீடு புகுந்து 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்திமுனையில் காரில் கடத்தி சென்றனர். உடனடியாக சரவணனின் சகோதரர் அளித்த தகவலின் பேரில் மாம்பலம் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் காரின் எண்ணை வைத்து 2 மணி நேரத்தில் ஈ.சி.ஆர் பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
கடத்தப்பட்ட சரவணன் மீட்கப்பட்டு, கடத்திய ஆரோக்கியராஜ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆரோக்கியராஜிடம் போலீசார் விசாரித்த போது, சரவணன் தன்னிடம் கடனாக வாங்கிய ஒரு கோடி ரூபாயைத் பல மாதங்களாகத் திருப்பித் தராமல் இழுத்தடித்ததாகவும், இதுகுறித்து தனது தோழியும், தோல் மருத்துவருமான அமிர்தா ஜூலியானா-விடம் கூறியபோது அடியாட்களை வைத்து சரவணனை கடத்தி வந்து பணத்தை மீட்குமாறு அவர் அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அமிர்தா ஜூலியானாவை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மருத்துவரை சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் சுப்பிரமணி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ஜூலியனா திடீரென நடுவர் முன்பு மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த ஜூலியானாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments