சென்னையில் தீபாவளி முதல் ஜியோவின் 5ஜி சேவை

0 3538
சென்னையில் தீபாவளி முதல் ஜியோவின் 5ஜி சேவை

ஜியோ நிறுவனத்தின் 5ஜி இணைய சேவை வரும் தீபாவளி முதல், சென்னை உள்ளிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 2023ம் ஆண்டு டிசம்பருக்குள் நாட்டின் அனைத்து நகரங்கள் மற்றும் தாலுகாக்களிலும் 5ஜி சேவை விரிவாக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருவதாகவும், கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கியதாகவும் கூறினார்.

ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி இணைய சேவைக்காக தனி கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், நாடு முழுவதும் 5ஜி சேவையை அமல்படுத்த 2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறைக்கேற்ற செயல்பாடு நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியதாக குறிப்பிட்ட அவர், உலகம் முழுவதும் நிலவும் கணிக்கமுடியாத சூழலில் இந்தியா மட்டும் வளர்ச்சிக்கும், சமநிலைக்கும் அடையாளமாக விளங்குவதாகவும் கூறினார்.

மேலும், நாட்டின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் பங்காற்றி வருவதாக குறிப்பிட்ட முகேஷ் அம்பானி, கடந்த நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி பிராட்பேண்ட் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், 10 கோடி வீடுகளுக்கு அதிவேக பிராண்ட்பேண்ட் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி சேவைக்கென தனியாக கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய மெட்ரோ நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments