மின் வாகன உற்பத்தியில் மௌனப் புரட்சி..!
மின் வாகன உற்பத்தி மூலம் இந்தியா மௌனப்புரட்சி செய்து வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் மின் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை அடையும் என்று தெரிவித்தார்.
குஜராத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 40 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, காணொலி வாயிலாக, ஹரியானாவில் மாருதி சுசுகி வாகன உற்பத்தி மையத்துக்கும், குஜராத்தில் ஹன்சல்புர் பகுதியில் 7 ஆயிரம் கோடியில் அமைய உள்ள மின்வாகனங்களுக்கான பேட்டரி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி மாருதி சுசுகியின் வெற்றி இந்தியா -ஜப்பான் இடையிலான கூட்டுறவின் வெற்றி என்று கூறினார். இந்தியா ஜப்பான் நட்புறவுக்கு பங்களிப்பு செய்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை நினைவு கூர்ந்த மோடி, தற்போதைய ஜப்பானிய பிரதமர் கிஷிடா தலைமையில் இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
இந்திய ஜப்பான் நட்பின் அடையாளமாக குஜராத் - மகாராஷ்ட்ரா இடையே புல்லட் ரயில், வாரணாசியில் ருத்திராட்ச திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பருவ நிலை தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின் வாகனங்கள் உற்பத்தியில் 50 சதவீதம் என்ற இலக்கை இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் அடையும் என்றும் மோடி கூறினார்.
மின் வாகனங்களின் தேவையை கருதி அதன் உற்பத்திக்கு கடனுதவி அளிப்பது, வரிச்சலுகை அளிப்பது போன்றவற்றை தமது தலைமையிலான அரசு செய்து வருவதாகவும் மோடி கூறினார்.
ஆட்டோ மொபைல் முதல் பயோ எரிபொருள் உற்பத்தி வரை 125 ஜப்பான் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் புரிந்து வருவதாகவும் மோடி கூறினார்.
நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய ஜப்பான் பிரதமர் கிஷிடா, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பாராட்டு தெரிவித்தார்.
Comments