நொய்டா : இரட்டை கோபுர கட்டிடங்கள் இன்று தகர்ப்பு
நொய்டாவின் இரட்டை கோபுர கட்டடங்கள் இன்று வெடி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. இதனையொட்டி அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புகை மற்றும் தூசு மாசு ஏற்படலாம் என்பதால் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
2004 ஆம் ஆண்டு நொய்டாவின் செக்டார் 93A இல் 'சூப்பர்டெக் எமரால்டு கோர்ட்' ஹவுசிங் சொசைட்டி கட்டப்பட உத்தேசிக்கப்பட்டது.40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்களின் அமைப்பு நிர்ணயிக்கப்பட்டது.இந்த இரட்டை கோபுரங்கள், நொய்டா பகுதியின் புவியியல் சார்ந்த நிலைக்கு ஏற்றதாக கட்டப்படவில்லை என்றும் , கட்டுமானம் சட்டவிரோதமானது என்று கூறி, குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுர குடியிருப்பு வளாகத்தை இடித்துத் தள்ளி நான்கு மாதங்ளுக்குள் ஃபிளாட்டுகளை வாங்கியவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை நிராகரித்துவிட்ட உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் மாதத்தின் 29 ஆம் தேதிக்குள் கோபுரங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சூப்பர் டெக் இரட்டை கோபுரங்கள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெடி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. நொய்டா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. சுகாதார அவசர நிலைக்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் குடியிருப்புகள் கொண்டுள்ள இந்த இரட்டை கோபுரங்களில் வசித்தவர்களும் அக்கம் பக்கம் இருந்தவர்களும் என 5000 பேருக்கு மேல் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டு, அவற்றுக்கு இடையில் இணைப்பு கொடுக்கப்பட்டது.3700 கிலோ வெடி மருந்து ஏற்கனவே கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. வெடிக்க வைத்ததும் 9 நொடிகளில் அவை தரைமட்டம் ஆகும் என்று கூறப்படுகிறது.இடிப்புக்குப் பின்னர் சுமார் 3 ஆயிரம் லாரி 'லோடு' கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு மூன்று மாதங்கள் ஆகலாம் என்று கட்டடக்கலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments