ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகலாம் என்பதால் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள்

0 3774
ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகலாம் என்பதால் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகலாம் என்பதால் ஆட்சியை தக்க வைக்கும் வகையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த ஆண்டில் தனது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றதாக கூறப்பட்ட நிலையில், அவர் தனது எம்எல்ஏ பதவியை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக பாஜக குற்றச்சாட்டியது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் தனது முடிவை சீலிட்ட உறையில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்சுக்கு சில தினங்களுக்கு முன் அனுப்பி வைத்தது. அதில், முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஹேமந்த் சோரன் இல்லத்தில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் இரு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்கள் அம்மாநிலத்தின் குந்தி பகுதியில் உள்ள அரசு பங்களாக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர்கள் சத்தீஷ்கரில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 49 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மட்டும் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்களும், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments