கால் நகங்களை பிடுங்கி லாக்கப்பில் ரணகொடூரம்.. 3 போலீசார் மீது கொலை வழக்கு..! இன்னொரு நிஜ ஜெய்பீம்..!
ஜெய் பீம் படம் போல நெய்வேலி நகர காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கால் நகங்களை பிடுங்கி சித்ரவதை செய்ததால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 7 வருடம் கழித்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வறுமையிலும் தனது கணவருக்காக பெண் முன்னெடுத்துள்ள வலிமையான போராட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான சுப்பிரமணியை கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் ஆதாய கொலை வழக்கில் விசாரிப்பதற்காக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், நள்ளிரவில் குடும்பத்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
7 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரது மனைவியிடம் ஒப்படைத்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது கால் நகங்கள் பிடுங்கப்பட்டு நடக்க இயலாமல் கொப்புளங்களோடு காணப்பட்ட சுப்பிரமணி அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்
மனைவி மற்றும் உறவினர்களின் போராட்டம் காரணமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. சுப்பிரமணியை அடித்துக் கொலை செய்து விட்டதாக குற்றஞ்சாட்டிய ரேவதி மற்றும் உறவினர்கள் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் எனகோரிக்கை விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது, விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், போலீஸ்காரர் சவுமியன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, இது கொலையாகாத மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு நடத்தும் நீதிமன்றமே முகாந்திரம் இருந்தால் கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்காக மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் ,கடந்த 4 ஆண்டுகளாக நடந்த இந்த மனு மீதான விசாரணையில் தற்போதைய மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜா, செந்தில்வேல், சவுமியன் ஆகியோர் மீதான கொலையாகாத மரண வழக்கை , கொலை மற்றும் எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் மாற்றம் செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
அதன்படி 3 போலீசார் மீதும் கொலை வழக்கு நடைபெறும். மேலும், அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று நீதி பதி தெரிவித்தார். வறுமையும், மிரட்டலும் தொடர்ந்தாலும் சுப்பிரமணியின் மனைவி ரேவதி நம்பிக்கையோடு ஏழு ஆண்டுகள் நடத்திய சட்ட போராட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
இடையில் பலர் பணாம் தருவதாக பேரம் பேசியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்த ரேவதி, சம்பந்தப்பட்ட 3 போலீசாருக்கும் தண்டனை பெற்று தருவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்
Comments