தோள் கொடுப்போம் தொழில்களுக்கு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்..!
MSME நிறுவனங்கள், பிணையின்றி நிதி பெற உதவும், தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கி வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்பதாலேயே, தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள்கொடுப்போம் தொழில்களுக்கு என்னும் பெயரில் திருப்பூரில் நடைபெறும் மண்டல மாநாட்டில், 167 கோடியே 58 இலட்ச ரூபாய் அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த உள்ள பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற முழக்கத்தோடு சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு உதவிகள் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் தயாரிப்பைச் சிறப்பு வகைத் தொழில்கள் பிரிவில் சேர்த்ததுடன், அதற்கு முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நிதி வசதியினை பிணையமின்றி எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், 40 இலட்ச ரூபாய் வரையுள்ள கடன்களுக்கு 90 விழுக்காடு உத்தரவாதமும், 40 இலட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை உள்ள கடன்களுக்கு 80 விழுக்காடு உத்தரவாதமும், மத்திய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு அளிக்கிறது.
Comments