இலவசங்கள் குறித்த வழக்கில் தி.மு.க.வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி
தேர்தலின் போது அறிவிக்கப்படும் இலவசங்கள் தொடர்பாக வழக்கில் இலவசங்களால் மத்திய மின் கழகங்கள் நஷ்டத்தை சந்திப்பதாக மத்திய அரசு வாதிட்ட நிலையில், விசாரணையின் போது குறுக்கிட்ட தி.மு.க. வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக கேள்வி எழுப்பினார்.
தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரி பாஜக வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இலவசங்கள் அறிவிப்பது முக்கிய பிரச்சனை என்றும் அது குறித்து விவாதம் தேவை என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
வழக்கில் வாதிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, தேர்தலின் போது இலவச கலர் டிவி, இலவச மின்சார அறிவிப்புகளால் ஏற்படும் பாதிப்பு வரி செலுத்தும் மக்களின் தலையில் விழுவதாக தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது அறிவிக்கப்படும் இலவசத்தால் மாநிலத்தின் கடன் தொகை அதிகரிக்கும் என்றும் இலவசங்கள் ஊழலுக்கு வழி வகுக்கும் என்றும் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிட்டார். இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
அப்போது இலவசங்களை தடுக்க விரும்பினால் நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும், இலவசங்கள் தொடர்பாக ஆணையம் அமைக்க நினைப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் குறுக்கிட முயன்றபோது, இந்த வழக்கில் திமுக மட்டும் தான் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம் என தலைமை நீதிபதி காட்டமாக குறிப்பிட்டார். இது பற்றி மேலும் பல விஷயங்கள் கூற வேண்டியுள்ளது என தெரிவித்த அவர், அது பற்றி பேசாமல் தவிர்ப்பதால் அது குறித்து அறியவில்லை என நினைக்கவேண்டாம் என தெரிவித்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றம் குறித்த தமிழக நிதியமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல என மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் குறிப்பிட்டார். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கால்நடைகள் தருவது, கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள்களை தருவது போன்றவற்றை கண்மூடித்தனமாக இலவசம் என கூறவில்லை என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கான வேறுபாட்டை தாங்கள் அறிந்திருப்பதாகவும், சாதாரண குடிமக்கள் கூட இந்த வேறுபாட்டை அறிந்து கொள்வார்கள் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.
Comments