இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட ஐ.எஸ். திட்டம்? ரஷ்யாவில் பயங்கரவாதி சிக்கினான்
இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை கொலை செய்ய திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்த ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியை ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. கைது செய்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான எஃப்.எஸ்.பி., தீவிரவாத தடுப்பு, எல்லைப் பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு வந்த பயங்கரவாதியை ரஷ்யாவில் வைத்து அந்த அமைப்பு சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.
கைதான அந்த பயங்கரவாதி, மத்திய ஆசிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் துருக்கியில் ஐ.எஸ். இயக்கத் தலைவர்களில் ஒருவரால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதத்திற்குள் தேர்வு செய்யப்பட்டவர் என்றும் எஃப்.எஸ்.பி.யின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், டெலிகிராம் செயலி வாயிலாக ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்ததாகவும், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அவர்களுக்குள் அடிக்கடி சந்திப்புகள் நிகழ்ந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, ரஷ்யா சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா செல்ல திட்டம் தீட்டிவந்தததாகவும், அதற்கான ஏற்பாடுகளில் பயங்கரவாதி ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 17ஆம் தேதியன்று ரஷ்யாவின் பாதுகாப்பு ஆலோசகரான நிகோலை பட்ருஷேவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய திட்டம் தீட்டியவர் கைது செய்யப்பட்டது முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது.
Comments