'ஸ்டைல் பாண்டி' பாணியில் கொள்ளை.. சிக்கிய அரை டிரவுசர் கொள்ளையர்கள்.!

0 2420

வடிவேலு நடித்த 'ஸ்டைல் பாண்டி' கதாபாத்திரத்தின் பாணியில் மற்ற வீடுகளை பூட்டி விட்டு ஒற்றை வீட்டை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிரவுசர் மட்டும் அணிந்து கொள்ளையடித்து வந்த அரை நிர்வாண கொள்ளையர்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு....

'நகரம்' என்ற திரைப்படத்தில் கொள்ளையனாக நடித்த வடிவேலு, அக்கம்பக்கத்தினரிடம் சிக்காமல் இருக்க, தான் திருடச் செல்லும் வீட்டை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து வீடுகளையும் பூட்டி விடுவார். இதே பாணியில் உறவினர்கள் இருவர் சென்னையில் அரை நிர்வாணத்தோடு சென்று கொள்ளையடித்து வந்துள்ளனர்.

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திரும்பியபோது, அவரது வீட்டில் 37 சவரன் தங்க நகைகள், 57 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து, அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், ரயில்வே பார்டர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் 20-க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இரு வீடுகளுக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்திய பொது கொள்ளையர்கள், கொள்ளையடிக்கும் வீட்டை தவிர மற்ற வீடுகளை பூட்டிவிட்டு கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. மேலும், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது இரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் அதே நபர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கொள்ளையர்கள் இருவரையும் அடையாளம் கண்ட போலீசார், பெரும்பாக்கம் சுனாமி குடியிருப்பு பகுதியில் பிளாட்பார்ம் பகுதிகளில் தங்கி இருந்தவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது சித்தப்பா ரவிக்குமார் என்பது தெரியவந்தது.

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் வெங்கடேசன், ரவிக்குமார் மற்றும் இவர்களது உறவினர் ஒருவர் என 3 பேர் கொள்ளையடிக்கச் செல்கின்றனர். கொள்ளையடிக்கும் போது யாராவது வந்தால் சத்தமிட வீட்டின் வெளியே உறவினரை நிறுத்தி வைத்து விட்டு, வெங்கடேசனும், ரவிக்குமாரும் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையடிக்க திட்டமிடும் வீட்டை தவிர்த்து, மற்ற வீடுகளை பூட்டி விட்டு,பின் பீரோவை கள்ளச்சாவி போட்டு திறந்து நகை, பணத்தை கொள்ளையடிப்பதை அவர்கள் வழக்கமாக கொண்டதாக போலீசார் குறிப்பிட்டனர். கொள்ளை முடிந்து செல்லும் போது பூட்டுகளை அவர்கள் கையோடு எடுத்துக்கொண்டு தப்பி விடுவதாகவும் கூறினர்.

கொள்ளையடிக்கும் போது யாரும் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக சட்டை, வேட்டி என எதுவும் அணியாமல் அரை டிரவுசர் மட்டுமே அணிந்து அரை நிர்வாணமாக கொள்ளையடித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகர், கோடம்பாக்கம், தாம்பரம் போன்ற பகுதிகளிலும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொள்ளையடித்த இவர்கள் மீது சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 47 சவரன் தங்க நகைகள், ஆறரை லட்ச ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments