அயல்நாட்டு மரங்களால் குறையும் நிலத்தடி நீர் மட்டம்.. யூகலிப்டஸ் மரத்தால் என்ன பாதிப்பு?

0 3633

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நிற்கும் அயல் நாட்டு மரங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ள நிலையில், அம்மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

அண்மை காலமாக காடுகள் தொடர்ந்து அழிவதன் காரணமாக, வறட்சி மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறையும் நிலை உருவாகியதால், உணவு பற்றாக்குறை ஏற்படுவதோடு வன விலங்குகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காடுகள் அழிவதற்கு மரங்களை அழிப்பது மட்டுமின்றி சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அயல்நாட்டு மரங்களும் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யூகலிப்டஸ், சீமை கருவேலம், சில்வர் ஓக், வாட்டில், உன்னிசெடி போன்றவை சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி நிலத்தடி நீரை முற்றிலுமாக உரிஞ்சக்கூடியவை என்பதால், அவற்றின் அருகில் வளரும் மரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் என துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வணிக நோக்கத்திற்காக அத்தாவரங்கள் விளை நிலங்களில் வளர்க்கப்படும் நிலையில், பசுமையான உணவுப்பயிர்கள் அழிவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் 12 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியை யூகலிப்ட்ஸ் மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், அந்த மலைப்பகுதிகளில் 60 முதல் 70 சதவீத மரங்கள் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், பல மாவட்டங்களில் வளரும் சீமை கருவேல மரங்கள், 40 அடி ஆழம் வரை வேர் பரப்பி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அயல் நாட்டு மரங்களின் தாக்கத்தால், வன விலங்குகளுக்கு உணவளிக்கும் தாவரங்கள் அழியும் சூழல் உள்ளதன் காரணமாக, உணவைத் தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வன விலங்குகள் வரும் அபாயம் உருவாகி வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஆபத்தை ஏற்படுத்தும் அயல்நாட்டு மரங்களை முற்றிலுமாக தமிழ்நாட்டில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments