ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை - எய்ம்ஸ் மருத்துவக் குழு

0 2750

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்தஅழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்புதான் அவரது மரணத்துக்கு காரணம் என எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் அளித்த வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, ஜெயலலிதாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாலும், மூச்சுத் திணறல் இருந்ததாலும் அப்போலோவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் உடல்நிலை சீரானதாகவும், பேச்சுப் பயிற்சி அளிக்க மேற்கொண்ட முயற்சி பலனளித்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பாக்டீரியா பாதிப்பால் சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்டதும், அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டதும் உடல்நிலையில் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழப்பதற்கு முந்தைய நாள் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், மூளை மற்றும் இதயம் செயலிழந்து உயிர் பிரிந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்பு தான் அவரது மரணத்துக்கு காரணம் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிலையிலும் அப்போலோ மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்பது மருத்துவ சிகிச்சை ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிக்கை மற்றும் ஆணையத்தின் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் விரைவில் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் நீதிபதி ஆறுமுகசாமி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments