வங்கி நகைகளை மறைத்த காவல் ஆய்வாளர் கைது: நகைகளை உருக்க கொள்ளையர் திட்டம்

0 4371

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மறைத்து வைத்த குற்றத்திற்காக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை லாட்ஜ் ஒன்றில் வைத்து உருக்க கொள்ளையர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஃபெட் கோல்ட் லோன்ஸ் வங்கியில் கடந்த சனிக்கிழமை அன்று தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. வங்கியில் பணிபுரிந்த முருகன் என்ற ஊழியர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்த நிலையில், அவர் உள்பட 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரது வீட்டில் இருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையர்களில் ஒருவனான சந்தோஷின் உறவினர், ஆய்வாளர் அமல்ராஜ் என்பதும் கொள்ளையடித்துவிட்டு ஆய்வாளரிடம் நகையின் ஒரு பகுதியை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், கொள்ளை தொடர்பாக பேட்டியளித்த சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, கொள்ளை கும்பலுக்கு உடந்தையாக இருந்து நகைகளை உருக்க உதவியதாக கோவையைச் சேர்ந்த ஸ்ரீவத்சவ் என்ற நபர் கைது செய்யப்பட்டதாக கூறினார். அதோடு, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கொள்ளையில் முருகன் தான் முக்கிய குற்றவாளி என்றும், கொள்ளையில் ஈடுபடும் முன் ஆய்வாளர் அமல்ராஜூக்கு தொடர்பு இல்லை என தெரியவந்திருப்பதாக கூறிய கூடுதல் ஆணையர் அன்பு, தெரிந்தே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

 ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் அமல்ராஜ், மீது திருடப்பட்ட சொத்தை மறைக்க உதவியதற்கான இந்திய தண்டனைச் சட்டம் 414 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். ஆய்வாளர் அமல்ராஜ் மனைவி இந்திராவிற்கும் இதில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூடுதல் ஆணையர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், வழக்கில் விரைவாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டதோடு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிராம் கூட குறையாமல் மீட்கப்பட்டது சென்னை காவல்துறையின் சாதனை என்றார்.

அதேபோல், கோவையைச் சேர்ந்த ஸ்ரீவத்சவ் என்ற நபர், நகையை உருக்க சென்னை வந்ததாகவும், பல்லாவரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி நகைகளை உருக்கும் போது அதிக அளவில் புகை வெளியேறியதால் அதை கைவிட்டதாகவும் கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார். இந்த நகைகளை உருக்குவதற்காக இயந்திரம் ஒன்றையும் கொள்ளை கும்பல் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்ததாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments