பெண் மென்பொறியாளரை கடித்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பு..! பூரான் என்று நினைத்ததால் பலியான உயிர்..!

0 36228
பெண் மென்பொறியாளரை கடித்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பு..! பூரான் என்று நினைத்ததால் பலியான உயிர்..!

ஈரோட்டில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்ததில் பெண் மென்பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் கடித்தது பூரான் என்று நினைத்த நிலையில் வீட்டிற்குள் பதுங்கி இருந்து சீறிவந்த  நாகப்பாம்பை இளைஞர் ஒருவர் கையால் பிடித்தார். பாம்பு கடித்தால் உயிர்காக்க உடனடியாக செய்ய வேண்டிய அவசர நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ஈரோடு அடுத்த பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்த 28 வயதான மென்பொறியாளர் திவ்ய பாரதி, இவருக்கு 2 வயதில் ஆண்குழந்தை இருக்கும் நிலையில், தனது தாய் வீட்டின் வளாகத்தின் முன்பக்கம் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார் . அந்த பகுதியில் குடி நீர் குழாய்கள் சுருண்டு கிடந்தது. அதன் மேல் மிதித்த போது எதோ பூச்சி ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது.

தண்ணீர் பிடித்து வந்த அவர், தன்னை பூரான் கடித்ததாக தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு கடித்த இடத்தில் நமச்சல் ஏற்படாமல் இருக்க மருந்திட்டுக் கொண்டு வீட்டில் இருந்துள்ளார். மதியம் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் கணபதிபாளையத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிற்கு அழைத்துச்சென்று பூரான் கடித்தாக கூறி உள்ளனர். அங்கு அதற்கு தடுப்பு மருந்து கொடுத்து மேல் சிகிசைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர்.

திவ்ய பாரதியின் உடலை பரிசோதித்ததில் அவரை கடித்தது பாம்பு என உறுதி செய்து மருத்துவர்கள் முதலுதவி அளித்துள்ளனர், அவருக்கு முழுமையான சிகிச்சையளிக்க எத்தகைய பாம்பு கடித்தது என்பதை அறியவதற்காக பாம்புபிடிக்கும் இளைஞர் யுவராஜ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது வீட்டின் சுவரில் எலி பொந்துக்கு அருகில் மறைந்திருந்த கோதுமை நாக பாம்பு ஒன்று வேகமாக தப்பிச்செல்ல முயன்றது, அதனை இளைஞர் பிடித்த நிலையில் அது மறைவிடம் தேடி வேகம் காட்டியது

அந்தப்பாம்பை முழுமையாக வெளியே பிடித்து தூக்கியதும் அது, இளைஞரை நோக்கி சீறிக் கொண்டு பாய்ந்தது . அந்தபாம்பை லாவகமாக பிடித்த இளைஞர் யுவராஜ், அதன் சீற்றத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் ஊற்றினார்

இதனிடையே, மயக்க நிலையில் சிகிச்சையில் இருந்த திவ்ய பாரதியை கடித்தது என்ன மாதிரியான பாம்பு என்பதை தெரிந்து விஷமுறிவு சிகிச்சை மேற்கொள்வதற்குள்ளாகவே, உடல் முழுவதும் விஷம் பரவியதால் திவ்ய பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இதே போல தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அர்ச்சனா, வீட்டில் சமைத்துகொண்டிருந்த போது அவரருகே சுவரின் துவாரத்தில் இருந்த நாகப்பாம்பை 5 வயது மகன் கார்த்திக் ராஜா விரட்ட முயன்றுள்ளான். அப்போது அவனை அந்த பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மயக்க மடைந்த அந்த சிறுவன்தாமதமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இது போன்று கடித்தது பாம்பு என்று தெரியாவிட்டாலும் கூட, பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம், எவ்வளவு சீக்கிரம், அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக அங்கு சென்று விவரத்தை சொல்லி விஷமுறிவு மருந்து செலுத்திக் கொண்டால் நரம்புகள், சிறு நீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் பாதிப்படைவதையும் தடுத்து விலைமதிப்பற்ற உயிரைக் காத்துக் கொள்ள முடியும் என்று கூறும் மருத்துவர்கள் எந்த ஒரு பூச்சிக்கடியையும் மெத்தனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடிக்கான விஷமுறிவு மருந்து தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments