டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் 14 மணி நேரம் நீடித்த சி.பி.ஐ. சோதனை நிறைவு

0 2741

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் வீடு அலுவலகம் உள்ளிட்ட  இடங்களில்  14 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கியமான இமெயில்கள் கணினிஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டில் மதுவிலக்குக் கொள்கையைத் தளர்த்தி 849 தனியார் மதுக்கடை உரிமையாளர்களுக்கு குத்தகை விட முடிவு செய்தது.மதுக்கடைகளுக்கான உரிமம் வழங்குவதில் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாகவும் உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மதுக்கடை உரிமம் பெற்றவர்களுக்குக் கூடுதல் காலம் ஒதுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மதுக்கடை உரிமையாளர்களிடமிருந்து பணம் பெற்ற பிறகு வெளிநாட்டு பீர் விலை குறைக்கபட்டது என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுக்கடை உரிமங்களுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டதா என்று சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் உள்பட மேலும் 15 பேர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று மணிஷ் சிசோடியாவின் இல்லம் ,அலுவலகம், கார்கள் உள்ளிட்ட 30 இடங்களில் சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் சுமார் 14 மணி நேர சோதனைக்குப் பின்னர் முக்கியமான இமெயில்கள், கணினி ஆவணங்களைக் கைப்பற்றி சோதனையை நிறைவு செய்தனர்.

தொடர்ந்து அவர் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையினரும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

சிபிஐ சோதனைகள் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா பாஜக அரசு சிபிஐயை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.தமது செல்போன், கணினியை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.சிபிஐக்குப் பூரண ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த சோதனைகளுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments