தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு..!
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23ஆம் நாளுக்கு முன்னிருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23ஆம் நாளுக்கு முன்னிருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன் எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் விஜயநாராயண் கோரிக்கை விடுத்தார். மேல்முறையீட்டு மனுவுக்கு எண்ணிடப்பட்டு வந்தவுடன் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜூலை 11ஆம் நாள் அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அலுவலகத்தைப் பூட்டிக் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கில் அவரிடம் சாவியை ஒப்படைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மறுத்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கை ஒருவாரத்துக்குப் பிறகு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments