அதிமுகவில் ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க உத்தரவு

0 3629
அதிமுகவில் ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க உத்தரவு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.

அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், அதனை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மறுக்க கூடாது என்று நீதிபதி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அவ்வாறு கோரிக்கை வைக்கும் பட்சத்தில் 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார். 

பின்னர் தனது ஆதரவாளர்களுடன் மெரினா சென்று, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் ஓபிஎஸ், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,அ.தி.மு.க.வில் இனி இருதரப்பு என்பதே கிடையாது என்றும், கட்சி எப்போதும் ஒரே இயக்கமாகவே செயல்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY