சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!
சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த முகமூடிக் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் கரூர் மாவட்டத்தை வெங்கடேசன் ஆகியோர் இணைந்து வடபழனி மன்னார் முதலி தெருவில் ஓசோன் கேபிடல் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளுக்கு இந்நிறுவனத்தினர் வட்டிக்கு பணம் கொடுத்துவருகின்றனர்.
நேற்று மாலை 3 மணியளவில் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்த 7பேர் கொண்ட முகமூடி கும்பல், அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி லாக்கரில் இருந்த 30 லட்ச ரூபாயை பணத்தை கொள்ளையடித்தது.
அங்கிருந்த நவீன் என்ற ஊழியர் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போது கத்தியால் அவரை முகமூடிக் கும்பல் வெட்டியது. மற்றொரு ஊழியர் தீபக் சாதுர்யமாக செயல்பட்டு ஒரு கொள்ளையனை மடக்கி பிடித்து கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குபதிவு செய்து பிடிப்பட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் விருகம்பாக்கத்தை சேர்ந்த இக்பால் என்பது தெரிய வந்தது. தப்பியோடிய மற்ற நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது வடபழனியில் நிதி நிறுவனத்தில் 30லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Comments