எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பதற்றமான சூழல்.. எல்லையில் நவீனமாகும் இந்திய ராணுவம்..!
எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சீன ராணுவத்துடன் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் ஒத்திகையை இன்று நடத்தியது. மேலும், எல்லைகளை கண்காணிக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் போன்றவை இன்று ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன...
எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பாங்கோங் ஏரியில் இந்திய ராணுவம் சார்பில் இன்று தாக்குதல் ஒத்திகை நடைபெற்றது. நவீன படகில் பயணித்து ஏரியின் மையத்தை அடைந்து திரும்புவது போன்ற ஒத்திகையை, ராணுவ வீரர்கள் நிகழ்த்தி காண்பித்தனர்.
ஒரே நேரத்தில் 35 வீரர்கள் பயணிக்கும் வகையிலும், ஏரியின் எந்த பகுதியையும் துரிதமாக சென்றடையும் வகையிலும், வடிவமைக்கப்பட்ட அப்படகுகளை ராஜ்நாத் சிங் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவம் வசம் ஒப்படைத்தார்.எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே முன்களப்பகுதியில் எதிரிப் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்த ஆளில்லா விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தரைப்படையின் போர் வாகனங்களும் பாதுகாப்புத்துறை சார்பில் இந்திய ராணுவத்திடம் வழங்கப்பட்டன. எஃப்-இன்சாஸ் எனப்படும் எதிர்கால காலாட்படை வீரர்களுக்கான அமைப்பை ராணுவத்திடம் அளிக்கப்படும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது.
இதன்படி, ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஏ.கே.-203 ரக துப்பாக்கி, பாலிஸ்டிக ரக தலைக்கவசம், அதநவீன கண்ணாடி, துப்பாகிக் குண்டுகள் துளைக்காத ஆடை போன்றவை வீரர்களுக்கு வழங்கப்படும். மேலும், தலைக்கசவத்தில் இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்க உதவும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் என பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப்பாறை அருகே பார்தாபூர் ராணுவ தளத்தில் ஒரு மெகாவாட் சூரியஒளி மின்உற்பத்தி நிலையமும் ராணுவம் வசம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
Comments