சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்
விருமன் படத்திற்கு ரசிகர்களை கூட்டமாக வரவைப்பதற்காக தூத்துக்குடியில் உள்ள கார்த்தி ரசிகர்கள் குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் சின்னத்தம்பி கால டெக்னிக்கை கையாண்டு வருகின்றனர்.
சின்னதம்பி படம் வெளிவந்த 90 களின் தொடக்க கால கட்டத்தில் ரசிகர்களை கவர்வதற்காக திரையரங்குகளில் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது. அதனை நினைவூட்டும் விதமாக ரஜினி நடிப்பில் வெளியான மன்னன் படத்தில் வைக்கப்பட்ட காமெடி காட்சி பிரபலமானது.
அன்று படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியாக தயாரிப்பாளர்களே ரசிகர்கள் மூலமாக ஒவ்வொரு திரையரங்குகளுக்கும் பெண்களை கவரும் பரிசுகளை அள்ளிக்கொடுத்தனர். தற்போது ஓடிடி தளங்கள் பெருகிவிட்ட நிலையில் திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட சில முன்னனி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர் கூட்டம் வருகின்றது.
மற்ற படி நல்ல படமாக இருந்தால் மட்டுமே 4 நாட்கள் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டத்தை காண முடிகின்றது. இந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள கார்த்தியின் விருமன் படத்துக்கு கூட்டத்தை சேர்க்கவும், பரிசு குறித்து அறிந்திராமல் படம் பார்க்க வந்தவர்களுக்கு சர்ப்பரைஸ் அளிக்கும் வகையிலும் தூத்துக்குடி மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது.
ரசிகர்களின் இருக்கை எண்களை கொண்டு இந்த குலுக்கல் நடத்தப்பட்டு படத்தின் இடைவேளையின் போது அதிர்ஷ்டசாலி ரசிகர்களை தேர்தெடுத்து 1500 ரூபாய் மதிப்புள்ள ஹெட்போன் வழங்கினர். பலருக்கு அவர்களது இருக்கையை தேடிச்சென்று பரிசு வழங்கப்பட்டது
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு காட்சிக்கு மட்டுமே குலுக்கல் முறையில் இந்த பரிசு வழங்கப்பட்ட நிலையில், கார்த்தி படத்துக்கு போனா பரிசு கிடைக்கும் என்று நம்பி திங்கட்கிழமை படம் பார்க்க சென்ற நிறைய பேர் ஏமாற்றத்துடன் வீட்டுக்குச்சென்றனர்.
இன்றைய குலுக்கல் எப்போது என்று ஆவலுடன் காத்திருந்த நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை விருமன் படம் ஓடினால் குலுக்கல் பரிசு உண்டு எனக்கூறி அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னனி நடிகர்களில் ஒருவராக சொல்லப்படும், கார்த்தியின் படங்களுக்கே பரிசு கொடுத்தால் தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்ற நிலை உருவாகி இருப்பது குறிப்பிடதக்கது.
Comments