சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர்..!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், தேசிய கொடியை ஏற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
போர் நினைவுச் சின்னத்திலிருந்து காவலர்கள் புடைசூழ கோட்டைக்கு வந்த முதலமைச்சரை, தலைமை செயலாளர் இறையன்பு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர் உள்ளிட்டோரை மரபுப்படி அறிமுகம் செய்து வைத்தார்.
முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்ற முதலமைச்சர், பின்னர் திறந்த ஜீப்பில் நின்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், இரண்டாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஸ்டாலின் ஏற்றினார்.
சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய சுதந்திரத்தில் தமிழகத்தின் பங்கு குறித்தும், தமிழர்களின் தீரத்தையும் போற்றி புகழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என கூறினார்.
அதேபோல், சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
பின்னர், மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கிய முதலமைச்சர், அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர், 75வது சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Comments