ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?
சென்னை ஃபெடரல் வங்கியின் ஃபெட் பேங்க் கோல்டு லோன் கிளையில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், 18 கிலோ தங்கத்தை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் கிளையில் சனிக்கிழமையன்று மாலை வங்கி ஊழியர்களைக் கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக வங்கியின் காவலாளி சரவணன், பெண் ஊழியர் ராஜலட்சுமி உள்ளிட்ட மூவரிடம் நடந்த விசாரணையில், அதே வங்கியில் வாடிக்கையாளர் சேவை மைய மேலாளராக பணிபுரிந்து வந்த, முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
சி.சி.டி.வி. காட்சிகள் மூலம், அவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொள்ளைக்கு, வெளியில் இருந்து உதவியதாக முருகனின் நண்பன் பாலாஜியை கைது செய்து விசாரித்த போலீசார், சக்திவேல், சந்தோஷ் என்பவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், கொள்ளையில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது
வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில் இதுவரை 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, கொள்ளையர்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் அடையாளத்தை வெளியிட்ட போலீசார், கொள்ளையர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தனர். தகவல் அளிக்க ஏதுவாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மேலும், வங்கியில் இருந்த நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வங்கி நிர்வாகம், வழக்கு முடிந்த பிறகு நகைகள் உரிய வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், நகைகள் கிடைக்காத பட்சத்தில் காப்பீட்டு பணம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.
இதனிடையே, வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிச்செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.
Comments