நாட்டின் சுதந்திர திருநாள்.! தலைநகரில் பலத்த பாதுகாப்பு.!

0 3562

சுதந்திர நாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால் டெல்லி செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இந்த விழாவில் புகழ்பெற்ற 250 பேர் உட்பட எட்டாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர். 

பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிடிபட்ட பயங்கரவாதிகள் அளித்த தகவலின்படி, பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் அடங்கிய டிரோன்கள் ஊடுருவியுள்ளதாகவும், அதனால் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கைத்துப்பாக்கி, கையெறிகுண்டுகள், ஏகே 47 வகைத் துப்பாக்கிகள் டிரோன்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது. கூரிய ஆயுதங்களால் தாக்கும் அல்லது வாகனங்களைக் கொண்டு மோதும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது. 

உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் எல்லைச் சோதனைச் சாவடிகளில் கடும் சோதனைக்குப் பின்னே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்கள், சந்தைப் பகுதிகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையைச் சுற்றிலும் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலைச் சந்திப்புகளில் தடுப்பரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி ஏந்திய காவல்படையினர் முழுநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி செங்கோட்டையில் டிரோன் தாக்குதலைத் தடுக்கும் வகையில், 4 கிலோமீட்டர் சுற்றளவில் டிரோன்களைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் ரேடார் கருவியைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் பொருத்தியுள்ளது. சந்தேகத்துக்கிடமான பொருட்கள் வானில் பறந்தால் அவற்றை வீழ்த்துவது குறித்துப் பாதுகாப்புப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை நாள் நிகழ்ச்சிகள் முடியும் வரை செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சந்தேகத்துக்கிடமான ஆள் நடமாட்டம் இருந்தால் அங்குள்ள காவல்துறையினருக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள், தேச விரோதிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கேமராக்கள் செங்கோட்டையின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் பொருத்தப்பட்டுள்ளன. 

இதனிடையே பஞ்சாபில் பயங்கரவாதிகள் 4 பேரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், வெடிகுண்டு, கைத்துப்பாக்கிகள், துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். உத்தரப் பிரதேசக் காவல்துறையினர் ஜெய்ஸ் இமுகமது இயக்கத்தின் பயங்கரவாதி சபியுல்லா என்பவனைக் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments