நாளை சுதந்திர தினம் : தலைநகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு!
75வது சுதந்திர தினமான நாளை, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரை நிகழ்த்துவதையொட்டி, தலைநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதையொட்டி, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நாளை தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதற்காக டெல்லி செங்கோட்டை முழுவதும் 10ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 7000 பேர் அழைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. செங்கோட்டையை சுற்றிலும் உயர் அடர்த்திமிக்க பாதுகாப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பாட்டில்கள் உள்பட எந்தவொரு பொருட்களும் செங்கோட்டை பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.வான்வெளி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் செங்கோட்டையில் ரேடார்களும் அமைக்கப்படுகின்றன
டெல்லியில் சாலைகள் எங்கும் ரோந்துப்பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், விருந்தினர் இல்லங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், உணவகங்கள் ஆகியவை சோதனையிடப்பட்டு வருகின்றன.
டெல்லி மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டாலும், ரயில் நிலையங்களில் இன்று முதல் நாளை பிற்பகல் வரை வாகனங்கள் நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் லாரி-வேன்கள் திங்கட்கிழமை வரை நகருக்குள் அனுமதிக்கப்படாது. செங்கோட்டை, பிரகதி மைதான், மோரிகேட் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் மாநகரப் பேருந்துகள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
Comments