டெஸ்ட் டிரைவ் என 8 லட்சம் ரூபாய் ஜீப்புடன் எஸ்கேப்பான போலி வக்கீல்..! வடிவேலு காமெடி பாணி சம்பவம்

0 6688

சென்னையில் வடிவேலு காமெடி பாணியில் ட்ரையல் பார்ப்பதற்காக கூறி 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாடிஃபைடு ஜீப்பை திருடுடி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகர் வடிவேலு நடித்த திரைப்படத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து பின்னர் வண்டிக்கான தொகையை கொடுப்பதாக கூறி இரு சக்கர வாகனத்தை இருவர் திருடிச்செல்லும் காட்சி இடம் பெற்று இருக்கும்.

இதே பாணியில் சென்னையில் கார் விற்பனை செய்யும் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஜீப்பை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை பாடி மேம்பாலம் அருகே சாய் கார் செலக்சன் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஷோரூம் உள்ளது. இதன் உரிமையாளர் சௌந்தரபாண்டியன். இந்த ஷோரூமில் ஹோண்டா சிட்டி, ஷிப்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனைக்கு வைத்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை இந்த ஷோரூம்க்கு, முருகன் என்பவர் தன்னை வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு உடனடியாக தனக்கு ஹோண்டா சிட்டி கார் வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் காரை டெஸ்ட் டிரைவ் எடுத்து சிறிது தூரம் ஓட்டி இருக்கிறார்.

அப்போது கார் ஷோருமின் ஊழியர் தனீஷ் என்பவர் உடன் இருந்திருக்கிறார். பின்னர் ஷோரூமுக்கு காருடன் திரும்பி இருக்கிறார். ஷோரூமில் இருந்த 90-களில் வெளிவந்த ஜீப்பை மறு வடிவம் செய்து விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள். இதனுடைய மதிப்பு 8 லட்சம் என ஷோரூம் ஊழியர் தெரிவித்துள்ளார்.

அது தனது மாமாவுக்கு வேண்டும் எனக் கூறி, அதனை டெஸ்ட் டிரைவுக்காக முருகன் எடுத்துச் சென்றிருக்கிறார். அப்போதும் கார் ஷோரூம் ஊழியர் தனீஷ் உடன் இருந்திருக்கிறார்.

அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு சென்று அந்த மண்டபத்தில் யூ டார்ன் அடித்து நிறுத்திவிட்டு, இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் தான் தான் எனவும், தனது மாமா உள்ளே இருப்பதாகக் கூறிவிட்டு மண்டபத்திற்குள் சென்றுள்ளார்.

மண்டபத்தின் மேனேஜரிடம் சென்று மண்டபத்தை புக் செய்ய வந்திருப்பதாகவும், அருகில் செயல்படும் சாய் கார் ஷோரூமின் உரிமையாளர் என தன்னை கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் ஜீப்பில் அமர்ந்திருந்த ஷோரூமின் ஊழியர் தனிஷிடம் வந்து தூரத்தில் நின்ற மண்டபத்தின் மேனேஜரை காண்பித்து கார் குறித்த விவரங்களை தெரிவித்துவிட்டு வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

கார் ஷோரூம் ஊழியர், மண்டபத்தின் மேனேஜரிடம் ஜீப் விலை குறித்து பேச சென்ற போது ஜீப்புடன் அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். அப்போது தான் தங்களை ஏமாற்றி ஜீப்பை ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது

உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று, அந்த ஊழியர் விசாரித்திருக்கிறார் ஆனாலும் கார் எங்கு போனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் கார் ஷோரூமில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் வந்து சோதித்தபோது அது கடந்த இரண்டு நாட்களாக வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதை தெரிந்து கொண்டு அந்த ஆசாமி இந்த திருட்டை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் அந்த டுபாக்கூர் ஆசாமியை வலை வீசி தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments