கத்திக்குத்தில் படுகாயம்..! உயிருக்குப் போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி
இந்திய வம்சாவளி நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கத்தியால் குத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. 1980களில் Satanic Verses என்ற நாவலை எழுதி மத அடிப்படைவாத அமைப்புகளின் பத்வாவுக்கு ஆளானவர் அவர். 75 வயது நிரம்பிய அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நியுயார்க் மாகாணம் Buffalo பகுதியில் கல்வி மையம் ஒன்றில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த நபர் மேடையேறி சல்மான் ருஷ்டியை சரமாரிக் குத்தினான். கழுத்து மார்பு வயிறு என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சல்மான் ருஷ்டி கீழே சாய்ந்தார். உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேடையில் அவனைப் பிடிக்க முயன்ற சிலருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. தப்பியோட முயன்ற அந்த இளைஞனை கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவன் பெயர் நியூஜெர்சியின் ஃபேர்வியூ பகுதியைச் சேர்ந்த ஹாதி மத்தர் என்பது தெரிய வந்தது. நியுபெனின்சுலா பகுதியில் பலத்த பாதுகாப்புள்ள இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சல்மான் ருஷ்டிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக நியுயார்க் ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கல்லீரல், கண் போன்றவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தனது ஒரு கண்ணை இழக்க நேரிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டது பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல் என உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் உள்ளிட்ட பலர் டிவிட்டரில் நலம் விசாரித்துள்ளனர்.
Comments