காமன்வெல்த் நிறைவுவிழா.. தேசியக்கொடி ஏந்தும் சரத், நிகத்
இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் தொடர் இன்று முடிவடைய உள்ள நிலையில், நிறைவு விழாவில் இந்திய அணி சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீனும் தேசியக் கொடியேந்தி செல்கின்றனர்.
22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இங்கிலாந்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளில் சுமார் 280 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். இந்நிலையில், இன்று நடைபெறும் நிறைவு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், குத்துசண்டை வீராங்கனை நிகத் ஜரீன் கொடி ஏந்தி செல்ல உள்ளனர்.
நடப்பு காமன்வெல்த் தொடரில் இதுவரை பதக்கங்கள் வெல்லாத பல போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகளை வெற்றிவாகை சூடினர். லான்பவுல்ஸ் என்ற போட்டியில் முதன் முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்ற இந்திய மகளிர் அணி, தங்கப்பதக்கத்தையும் வென்றது. அதேபோட்டியில், ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர்கள் வெள்ளி வென்று சாதனை படைத்தனர். மேலும், நடை ஓட்ட போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை கைப்பற்றியது.
அதேபோல், டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி, தங்கமும், வெள்ளியும் வென்றனர். மேலும், மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அதிகளவில் தங்கத்தை குவித்தனர். இது தவிர, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் போட்டியில் இந்தியா பதக்கங்களை வென்றது.
காமன்வெல்த் தொடரில், 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை இந்தியா வென்றது.
Comments