காமன்வெல்த் தொடர் நிறைவு.. பதக்கங்களைக் குவித்த இந்தியா..!
கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள், வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்புடன் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டி நிறைவடைந்தது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28ந் தேதி தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி, அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் வண்ணயமான நிறைவுவிழா நடைபெற்றது.
1950களில் பர்மிங்காம் குழந்தைகள் விளையாடியது, தொழிற்புரட்சிக்குப் பின் தொழிலாளர்கள் உற்சாகத்துடன் கொண்டாடியது போன்றவற்றைக் குறிக்கும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அப்பாச்சி இண்டியன், பஞ்சாபி இசைக்குழு, புகழ்பெற்ற பீக்கி பிளைண்டர்ஸ் ஆகிய கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் அணிவகுத்து வந்தனர்.இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், குத்துசண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். போட்டியின் நிறைவாக வாணவேடிக்கைகளைக் கண்டு மைதானத்தில் இருந்தவர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கொடி இறக்கப்பட்டு, அடுத்த போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காமன்வெல்த் தொடரில் 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும், கனடா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
Comments