கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் கிராவல் எடுப்பதாக கூறி தாதுக்கள் நிறைந்த தேரி மண் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரி மணல் குன்றுகள் அமைந்துள்ளன.
தமிழகத்தில் வேறு எங்கும் அமைந்திடாத இந்த தேரி மணல் பகுதிகளை பாதுகாத்திடும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே காயாமொழி தேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. நாலுமாவாடியை சேர்ந்த நபருக்கு சொந்தமான இந்த இடத்தில் அரசு கட்டுப்பாடுகளை மீறி சுமார் 50 அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் தோண்டி நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தாதுக்கள் நிறைந்த செம்மண் கொள்ளை அடிக்கப்பட்டு லாரி லாரியாக கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி மக்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய தேரி மணல் குன்றுகள் அழிக்கப்பட்டு வருவதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் காயாமொழி பகுதியை சேர்ந்த மக்கள், செம்மண்ணை கடத்திச் சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் தாலூக்கா காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஓட்டுநரிடம் விசாரனை நடத்தினர்.
விசாரணயில் வண்டல் மண், கிராவல் மண் அள்ள அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து செம்மண் தேரியை பார்வையிட்டனர். 50 அடிக்கு மேல் கிட்டிடாச்சி எந்திரம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மணல் அல்ல பயன்படுத்திய கிட்டாச்சி வாகனம், மற்றும் லாரிகளை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் திருடப்படும் மணல் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுவதாகவும் இவை வீடுகட்டவோ, விவசாயத்தக்கோ பயன்படுத்த இயலாத நிலையில் தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால் அதிக விலைகொடுப்பதாக கூறப்படுகின்றது.
தாதுக்களை சட்டவிரோதமாக பிரித்து எடுக்கும் சில நிறுவனங்கள் இந்த செம்மண்ணை வாங்கி பயன்படுத்துவதால், மாவட்ட நிர்வாகம் உடனே இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தேரி மணல் பகுதிகளை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments