தங்கங்களை அள்ளிய இந்தியா.. குத்துச்சண்டையில் ஆதிக்கம்

0 4451

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்றும் வரும் காமன்வெல்த் தொடரில், இந்தியா இன்று இதுவரை 4 தங்கம் உள்ளிட்ட 9 பதக்கங்களை அடுத்தடுத்து வென்றுள்ளது.

குத்துச்சண்டை போட்டியில் 45 முதல் 48 கிலோ வரையிலான எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நீத்து கங்காஸ் தங்கப்பத்தை வென்றார். இறுதிப்போட்டியில்
இங்கிலாந்து வீராங்கனை டேமியை வீழ்த்தி அவர் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 48 முதல் 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால், இங்கிலாந்தின் கியாரனை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார். போட்டி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அமித் பங்கால், 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார்.

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிக்கத் ஜரீன் தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்தின் மெக்நாலை வீழ்த்தி அவர் பதக்கத்தை கைப்பற்றினார்.

டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இந்திய வீரர் எல்தோஸ் பால் 17 புள்ளி 3 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், அப்துல்லா அபுபக்கர் 17 புள்ளி 2 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார். 

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் இணை வெள்ளிப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் டிரிங்ஹால், பிட்ச்போர்டு இணையிடம் 3க்கு 2 என்ற கணக்கில் இந்திய இணை வீழ்ந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆட்டம் 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்த நிலையில், பெனால்டி ஷூட் முறையில், 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றது.

அதேபோல், 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டப் போட்டியில், இந்திய வீரர் சந்தீப் குமார் 38 நிமிடம் 49 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். மேலும், ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை அன்னு ராணி 60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலம் வென்றார். காமன்வெல்த் தொடரில், இதுவரை 17 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments