2047ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறித்துப் பிரதமர் மோடி பேச்சு.!
2047ஆம் ஆண்டில் இந்தியா அடைய வேண்டிய இலக்குகள் குறித்து நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பரமேஸ்வரன், துணைத் தலைவர் சுமன்பெரி, உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, தங்கள் மாநிலத்தில் பின்பற்றி வரும் சிறந்த திட்டங்களைப் பற்றி முதலமைச்சர்களும், துணைநிலை ஆளுநர்களும் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தனர். தேசியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதில் கருத்தொற்றுமை உள்ளதாகவும், ஏற்றுமதியின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் பேசியதாகவும் குறிப்பிட்டனர்.
நாட்டின் சமையல் எண்ணெய்த் தேவையில் பாதியை இறக்குமதி செய்து வருவதால், எண்ணெய் வித்துக்கள், பயறுவகைகள் விளைச்சலில் தன்னிறைவை அடையும் வகையில் வேளாண்மையைப் பன்மயப்படுத்த வேண்டியதன் தேவையைப் பிரதமர் வலியுறுத்தியதாகத் தெரிவித்தனர்.
Comments