தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை
தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி குறைந்துகொண்டே வரும் நிலையில் சாகுபடி பரப்பளவையும், விளைச்சலையும் அதிகரிக்க தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நம் அன்றாடக வாழ்க்கையில் தோட்டக்கலை பயிர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதுடன், விவசாயத்தில் அதிக வருமானம் ஈட்டிக் கொடுப்பவற்றிலும் தோட்டக்கலைப் பயிர்கள் முன்னணியில் உள்ளன.
மா, பலா, கொய்யா, பப்பாளி, சீத்தா, எலுமிச்சை போன்ற பழப்பயிர்களும் கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி வகைகளும், மலர் வகைகளும், மூலிகை தாவரங்களும், இயற்கை இடுபொருட்களும் தோட்டக்கலை பயிர்களில் அடங்கும்.
கடந்த சில வருடங்களாக தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் விளைநிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டே வருவதாக கூறப்படுகிறது. தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பளவையும், விளைச்சலையும் அதிகரிக்க தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பயிர்களின் சாகுபடி பரப்பளவையும், விளைச்சலையும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க 27.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காய்கறிகள், பழங்கள், நறுமண செடிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 300 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய விதைகளும், நடவு கன்றுகளும் 40 சதவீத மானிய விலையில் வழங்க தோட்டக்கலைத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவர் சந்தைகளில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ள நிலையில் வரத்தினை அதிகரிக்க காய்கறி விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 8 ஆயிரம் ரூபாய் தோட்டக்கலைத் துறை வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படுகிறது. பயிர்களை சாகுபடி செய்ய பயன்படும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதுடன், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பையும், விளைச்சலையும் அதிகரிக்க தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியையும், விளைச்சலையும் அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments