120 கி.மீ வேகம்.. சின்னாபின்னமான XUV700 கார்.. பலி எண்ணிக்கை 5 ஆனது.. அதிவேகம் ஆயுளுக்கு ஆபத்து..!

0 9361
120 கி.மீ வேகம்.. சின்னாபின்னமான XUV700 கார்.. பலி எண்ணிக்கை 5 ஆனது.. அதிவேகம் ஆயுளுக்கு ஆபத்து..!

200 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் பிரேக் அடித்தவுடன் அப்படியே நிற்கும் என்றும், பில்டு குவாலிட்டி மற்றும் கிராஸ் டெஸ்டில் பைவ் ஸ்டார் ரேட்டிங் பெற்ற வாகனம் என்றும் யூடியூப்பர்களால் புகழப்பட்ட, மஹிந்திராவின் எக்ஸ்.யூ.வி 7 டபுள் ஓ சொகுசு கார், தாராபுரம் அருகே பேருந்து மீது மோதிய வேகத்தில் சின்னபின்னமான நிலையில் அதில் பயணித்த 5 பேர் பலியான சோகம் அரங்கேறி உள்ளது.

அதிகம் வேகம் எப்போதும் ஆபத்து என்பதை உணர்த்தும் விதமாக என்ன கம்பெனி கார் என்பதே தெரியாத வண்ணம் உருக்குலைந்து, என்ஜின் மட்டும் கழண்டு தனியாக சாலையில் பழைய இரும்பு சாமான் போல கிடப்பது, மஹிந்திரா நிறுவனத்தின் xuv7oo 7 சீட்டர் சொகுசு கார்..!

இந்த கார் வாங்க வேண்டு மென்றால் முன்பதிவு செய்து குறைந்த பட்சம் 18 மாதங்கள் காத்திருக்க வேண்டும், அந்த அளவுக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் பிரேக் அடித்தால் அப்படியே நிற்கும் பாதுகாப்பானது என்று ஒரு வித ஹைப்பை யூடிப்பர்கள் தங்களது விமர்சன யுக்தியால் ஏற்றி விட்டனர்.

இதனால் பட்ஜெட் 20 லட்சம் ரூபாயை தாண்டினாலும் இந்த காரை வாங்குவதில் நடுத்தரவர்க்க வாடிக்கையாளர்களும் ஆர்வம் காட்ட தொடங்கினர்.

அந்தவகையில் ஆசை ஆசையாய் இந்த காரை வாங்கியவர் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த வீரக்குமார். இவர் திண்டுக்கல்லில் கோவில் விழாவில் நடந்த கிடா விருந்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவரது புத்தம் புதிய எக்ஸ்யூவி 7 டபுள் ஓ கார் தாரபுரம் அருகே காக்காப்பாளையம் அருகே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பை தாண்டிச்சென்று எதிர்திசையில் வந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வீரக்குமாரின் எக்ஸ்யூவி 7 டபுள் ஓ வாகனம் சின்னாபின்னமாக சிதறியது. காரில் பயணித்த வீரக்குமார், மகேஷ்குமார், முருகேசன், வெற்றிச்செல்வம் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பலியான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த சஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்துக்குறித்து விவரித்த போலீசார், இந்த கார் மட்டுமல்ல எல்லா நிறுவன கார்களுமே 64 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று மோதினால் என்னவாகும்? என்பதை அடிப்படையாக கொண்டே கிராஸ் டெஸ்ட் செய்து பைவ் ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படுகின்றது.

ஆனால் இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்தவர்கள் 120 கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக ஓட்டிவந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார் எதிர்திசைக்கு சென்று பேருந்தில் மோதி அதன் முன்பக்க ஆக்ஸில்களை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளது.

இது போன்ற விபத்துக்களில் 4 ஏர் பேக்குகள் அல்ல 8 ஏர் பேக்குகள் இருந்தாலும் உயிர் இழப்பை தவிர்க்க இயலாது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

கார்களை விற்பதற்கு ஒவ்வொரு கார் நிறுவனங்களும் கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை வெளியிட்டாலும், அதனை வாங்கி ஓட்டும் வாடிக்கையாளர்கள் சாலைகளில் பயணிக்கும் போது குறைந்த பட்சம் 60 முதல் அதிக பட்சம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே கார்களை இயக்கினால் கட்டுப்பாடுத்த இயலும், அதனை விடுத்து 100 கிலோ மீட்டரை தாண்டி வேகம் எடுத்தால் 108 ல் செல்லும் விபரீதத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments