காவிரியில் வெள்ளப்பெருக்கு... கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கின
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குக் காவிரியில் நீர்வரத்து நொடிக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நொடிக்கு 78 ஆயிரத்து 266 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 21 ஆயிரத்து 667 கன அடி நீரும் திறக்கப்பட்டது. இத்துடன் கர்நாடகத்தின் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெய்யும் மழைநீரும் சேர்ந்து தமிழகத்துக்கு வந்துகொண்டுள்ளது.
தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்று நொடிக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. எனினும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் தடுப்பு வேலிகளையும் மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து முற்பகல் 11 மணி நிலவரப்படி ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியே ஒரு இலட்சத்து 7 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
Comments