குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பிரதமர் மோடி வாக்களித்தார்
குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தொடக்கத்திலேயே தனது வாக்கைச் செலுத்தினார். மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவையின் 788 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். மாநிலங்களவையில் 8 இடங்கள் காலியாக உள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவுக்கு மட்டும் 394 உறுப்பினர்கள் உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 510 வாக்குகள் ஜெகதீப் தன்கருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. பகுஜன் சமாஜ், தெலுங்குதேசம் கட்சிகளும் ஜெகதீப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மார்கரெட் ஆல்வாவுக்கு இருநூற்றுக்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது. ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இரு அவைகளிலும் 36 உறுப்பினர்களைக் கொண்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வாக்களிக்காமல் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.
காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கத்திலேயே பிரதமர் மோடி தனது வாக்கைச் செலுத்தினார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜிதேந்திர சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் வாக்களித்தனர். முன்னாள் பிரதமரும் மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவு அறிவிக்கப்படும். வெற்றி பெறுபவர் புதிய குடியரசுத் துணைத் தலைவராக ஆகஸ்டு 11ஆம் நாள் பதவியேற்றுக் கொள்வார். குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவார் என்பதால், இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.
Comments