குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு
நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜக்தீப் தன்கர், மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடும் இத்தேர்தலில், இன்று மாலை முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
வெங்கைய நாயுடுவின் பதவிக் காலம் வரும் 10ந் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
பாஜக தலைமையிலான கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.
இன்று நடைபெறும் வாக்குப்பதிவில், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 788 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மாநிலங்களவையில் தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும். புதிய குடியரசு துணைத் தலைவர் வரும் 11ந் தேதி பதவியேற்றுக் கொள்வார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவிற்கு மட்டும் 394 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் 510 வாக்குகள் ஜகதீப் தன்கருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பகுஜன் சமாஜ், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் அவரை ஆதரித்து வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன.
மார்கரெட் ஆல்வாவுக்கு 200-க்கும் குறைவான எம்.பி.க்களின் ஆதரவே உள்ளது. ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 36 எம்.பி.க்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர் மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவார் என்பதால், இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Comments