போலி எண்கொண்ட காருக்காக 9 சுங்கசாவடிகளில் இருந்து பாஸ்டேக்கில் பணம் திருட்டு.. அசல் காரின் உரிமையாளர் அதிர்ச்சி..!
சேலம் அருகே வேறு ஒரு காரின் எண்ணை போலியாக பயன்படுத்தி சுங்கச்சாவடிகளை மோசடியாக கடந்து சென்ற கார் புரோக்கரை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே இடத்தில் நின்ற காரின் பாஸ்டேக் கணக்கில் இருந்து 9 சுங்கச்சாவடிகளில் பணம் எடுக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சேலம் மாவட்டம் சார்வாய்புதூர் வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் இனியன். இவரது மஹிந்திரா வெரிட்டோ கார் வீட்டில் நிருத்தப்பட்டிருந்த நிலையில் இவரது கார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாஸ்டேக் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. கடந்த மாதம் 15 ந்தேதி மட்டும் பொன்னம்பல பட்டி சுங்கசாவடி தொடங்கி சுமார் 9 சுங்கசாவடிகளை ஒரே நாளில் கடந்ததாக இவரது பாஸ்டேக் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை திருடப்பட்டது.
பாஸ்டேக் முழு பாதுகாப்பானது என்று கூறப்பட்ட நிலையில் தனது வாகனம் எங்கும் செல்லாத நிலையில் பாஸ்டேக் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது எப்படி என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள கோரி இனியன் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சேலம் சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன தலைவாசல் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். இனியன் காரின் பாஸ்டேக் வங்கி கணக்கில் இருந்து எந்தெந்த சுங்கச்சாவடிகளில் எல்லாம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் அனுப்பபட்டதோ அங்கு சென்று விசாரித்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் குறிப்பிட்ட அந்த 15 ந்தேதி இனியனின் கார் எண் கொண்ட போலியான நம்பர் பிளேட் பொறுத்தப்பட்ட கார் ஒன்றில் இருவர் சம்பந்தப்பட்ட 9 சுங்கச்சாவடிகளையும் கடந்து சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த காரில் வந்தவர்கள் தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் என்று போலியான அடையாள அட்டை காண்பித்து சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்குகேட்டதாகவும், சுங்கசாவடி ஊழியர்கள் முறையான சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என்று நிர்பந்தித்த நிலையில், வாகன எண்ணை வைத்து பணம் எடுத்துக் கொள்ள கூறி உள்ளனர். அதன்படி வாகன எண்ணை ரெக்கவரி குழுவின் கவனத்துக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆன் லைனில் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் கார் எண்ணை வைத்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இனியன்காரில் ஒட்டப்பட்ட பாஸ்டேக் காணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனுமதித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாஸ்டேக் மோசடியில் ஈடுபட்டது நாமக்கல் பகுதியை சேர்ந்த கார் புரோக்கர் பாலகணேஷ் மற்றும் கார்த்திகேயன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அதே நேரத்தில் வெறுமனே காரின் நம்பரை மட்டும் வைத்து போலியான பதிவெண் கொண்ட காருக்காக, ஒரிஜினல் கார் உரிமையாளரின் பாஸ்டேக் கணக்கில் இருந்து பணத்தை திருடிய சுங்க சாவடி ஊழியர்கள் மீதோ அதற்கு அனுமதித்த சுங்கச்சாவடி ரெக்கவரி குழுவினர் மீதோ காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று புகார் எழுந்தது
இது குறித்து காவல்துறை தரப்பில் கேட்ட போது, சுஙகச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்கேனர் வேலை செய்யாமல் பழுதானால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக வாகனங்களின் நம்பரை கொண்டு பாஸ்டேக் கணக்கிக்ல் இருந்து பணம் எடுக்கும் முறை அமலில் இருப்பதாகவும், இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு கார் புரோக்கர் பாலகணேஷ் , பெங்களூரில் இருந்து பழைய கார்களை வாங்கி விற்பனைக்காக எடுத்துச்செல்லும் போது ,திட்டமிட்டே அந்த காருக்கு வேறு ஒரு காரின் நம்பர் பிளேட்டை பொறுத்தி மோசடியாக சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளார் எனவே அவரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர் .
அதே நேரத்தில் பாஸ்டேக் பாதுகாப்பானது என்றும் அப்படியே பணம் திருடப்பட்டால் கூட சம்பந்தப்பட்டவர்கள் சிக்கிக் கொள்வார்கள் என்பது பாஸ்டேக் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வாதமாக உள்ளது
Comments