காவிரியில் தமிழகத்துக்கு நீர்வரத்து நொடிக்கு 1.8 இலட்சம் கன அடி

0 2392

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நொடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து நொடிக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கன அடியாக உள்ளது. 

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நொடிக்கு 81 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணைக்கு நொடிக்கு 13 ஆயிரத்து 12 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நொடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்று 2 இலட்சத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் தடுப்பு வேலிகளையும் மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு 2 இலட்சத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக ஒரு இலட்சத்து 57 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள முந்நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பவானி - குமாரபாளையம் இடையே தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களைத் தொடுமளவுக்கு பரந்து விரிந்து வெள்ளம் பாய்கிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பள்ளிக் கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குச் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பணன் உணவு வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் மேட்டுப் பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 22 பேர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வந்துள்ளனர். பள்ளிப்பாளையத்தில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளம்பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர். 

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தில் காவிரிக் கரையோரத்தில் உள்ள முப்பதுக்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் மாயனூரில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து நொடிக்கு 2 இலட்சத்து 14 ஆயிரத்து 252 கன அடியாக இருந்தது. கதவணையின் அனைத்து மதகுகளையும் திறக்கப்பட்டு இந்த நீர் காவிரியில் பாய்கிறது.

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள குடிசைகள் நீரில் மூழ்கியதால் அதிலிருந்தோர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து காவிரிஆற்றில் நொடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீரின் வேகத்தால் கம்பரசம்பேட்டையில் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத் தூண் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கிருந்து திருச்சி அண்ணா நகர், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்குக் குடிதண்ணீர் எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத் தக்கது.

திருச்சி - திருவரங்கம் இடையே உள்ள பழைய காவிரிப் பாலத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று இரவு முதல் மூடப்பட உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கொம்பு அணையில் இருந்து 65 ஆயிரம் கன அடி நீர் காவிரியிலும், பெருமளவு நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்க வேண்டாம் என எச்சரித்தும் வெளியூர் பக்தர்கள் பலரும் ஆபத்தை உணராமல் கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments