காவிரியில் 2.3 இலட்சம் கன அடி நீர்... கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கின

0 3238

கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்குக் காவிரியாற்றில் நீர்வரத்து நொடிக்கு இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நொடிக்கு 68 ஆயிரத்து 100 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 83 ஆயிரத்து 100 கனஅடி நீர் காவிரியில் பாய்கிறது.

 

இத்துடன் கர்நாடக அணைகளுக்குக் கீழ் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் தமிழகத்துக்கு நண்பகல் நிலவரப்படி நொடிக்கு இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் தடுப்பு வேலிகளையும் மூழ்கடித்து ஆறு முழுவதும் பரந்து விரிந்து வெள்ளம் பாய்கிறது.

 

காவிரியில் நீர்வரத்துத் தொடர்ந்து உயரும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில் இன்று முற்பகல் 11 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 2 இலட்சத்துப் 10 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையில் இருந்து சுரங்க மின் நிலையம், 16 கண் மதகுகள் ஆகியவற்றின் வழியே இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் இந்திரா நகரில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பாதுகாப்புக் கருதி இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments